🌞 நெற்றியில் மூன்று வெள்ளை நிறக்கோடுகள் அணிந்த ஞானியை நோக்கி கேள்விகளை மாலையாக தொடுத்தது ஒரு ஜீவன். 🌴 🌴
♥️ ஏன் இந்த வெள்ளைக்கோடுகள் நெற்றியில் ?
ஞானி அழகிய பார்வையை வீசிவிட்டு அன்பான என் ஜீவனே இந்த கேள்வி வாழ்க்கைக்கு மிக முக்கியமான பதிலைத்தர காத்திருக்கும். கொஞ்சம் காத்திரு.
ஞானி வார்த்தைகளை மலைச்சாரலாய் விடுக்க ஆரம்பித்தார். இந்த வெள்ளைக்கோடுகளைப் பற்றி ஒரு விஷயம் உண்டு ஆனால் அதன் சாராம்சம் என்பது அறம், பொருள் , இன்பத்தை குறிக்கும் பெரும்பாலும் தொடக்க நிலை ஜீவன்கள் அதாவது இந்த உலக வாழ்க்கையை பிரதானமாக எண்ணும் மனிதர் மூன்று கோடுகளை இடுவார். இன்பத்தை துறந்த ஞானிகள் இரண்டு கோடுகள் நெற்றியில் இடுவர். இந்த உலக வாழ்க்கையில் அறம் , பொருள் , மற்றும் இன்பத்தை சமநிலையாக பாவிக்கும் எண்ணம் இருக்க வேண்டும் என்பதே இந்த மூன்று கோடுகளின் அர்த்தம்.அதில் அறம் என்பது உயர்ந்த நிலையிலும் பொருள் என்பது நடுநிலையிலும் , இன்பம் என்பது கடை நிலையிலும் இருக்க வேண்டும். அதனால் தான் அய்யன் திருவள்ளுவர் அறத்தை முதன்மையாகவும் அடுத்த பாகத்தை பொருளிலும் , இன்பத்தை கடைசியாகவும் கொடுத்திருக்கிறார்.
உயிர் எழுத்தின் முதல் எழுத்து " அ "என்ற எழுத்தில் தொடங்கும் ஆத்திச்சூடியில் அறம் செய்ய விரும்பு என்று முதல் வரியில் கொடுத்திருக்கிறார்.
அடுத்த கேள்வி உனக்குள் எழும்
♥️ அறம் என்பது என்ன ? என்று.
அறம் என்பது தன்னையும் காத்துக்கொண்டு , தன் அருகில் இருக்கும் இயலாதவர்களையும் காப்பதே ஆகும் மற்றவருக்கு உதவ வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டதே கோவிலும், கோவில் சார்ந்த அமைப்புகளும். அதன் வழிமுறைகளும் ஆகும் .
♥️ கழுத்தில் இடும் ருத்ராக்ஷம் எதற்காக ??
ஆழ்ந்த மௌனம் நிலவ, ஞானி தன்னுடைய எண்ணங்களைத் திறக்கிறார். ருத்ராக்ஷம் என்பது மரத்தில் இருந்து விழுந்த விதை. விதையின் குணம் ஒன்றை உருவாக்குவதே. எது நம்மைச்சுற்றி இருக்கிறதோ அதுவாக நாம் இருக்கிறோம். அதன் மூலமே நமது எண்ணங்கள் பிறக்கிறது. நாமும் ருத்ராக்ஷம் போல ஒன்றை உருவாக்க வேண்டுமே தவிர , அழிக்கும் எண்ணம் நம்மில் உருவாகக்கூடாது. நம் எண்ணங்களைப் பொருத்தே நம்முடைய வாழ்க்கை மாறுகிறது. அதை உணர்த்துவதற்குதான் கழுத்தில் ருத்ராக்ஷம் அணிகிறோம்.
♥️ ஆன்மீகம் என்பது நமக்கு முக்கியமா??
அன்பு குழந்தையே , நம்மில் நேர்மறை எண்ணங்களை உருவாக்குவதே ஆன்மீகத்தின் நோக்கம். ஆன்மீகம் ஒழுக்கத்தின் செயல்பாடு. அங்குள்ள புத்தகங்கள் அவற்றை வழிநடத்தும் சுடரொளி. புத்தகம் படி . ஆன்மீக புத்தகம் படி . ஆன்மீக புத்தகங்கள் படிப்பதனால் அவற்றின் வழிமுறைகளும் வாழ்வின் நன்மைகளையும் நீ உணர்ந்து கொள்ள.முடியும்.
♥️ இறைவனை எவ்வாறு உணர்ந்து கொள்வது?
கடுமையான வெயிலில் நடந்து சென்று கொண்டிருக்கும் ஒருவன் தன் முதுகில் உள்ள ஒற்றைத்துளி வியர்வையில் காற்று படும்போது அவன் எவ்வாறு உணர்வானோ ? அதே போல் கடுமையான நேரங்களில் நமக்கு கிடைக்கும் உதவியில் இறைவனை உணர்ந்து கொள்ள முடியும். இந்த முறையைத்தான் ஞானிகளும் மகான்களும் பின்பற்றி வந்திருக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் நமக்கு இடர்கள் வருவதே இறைவனை உணர்ந்து கொள்ள நமக்கு கிடைக்கும் வாய்ப்பு
♥️ சாம்பல் திருநீறு ஆகிறதே என்ன காரணம் ?
இந்த உலகில் நாம் எதை வீண் என்று நினைக்கிறோமோ ? அது சாதனை படைத்துவிடுகிறது. மாட்டின் சாணம் எரிந்து சாம்பலாகி திருநீறு ஆகிறது. வீண் என நினைக்கும் குப்பைகள் உரமாகிறது
இந்த மனித உடல் எடுத்ததன் பயன் வினைகளை குறைப்பதற்குத் தான். ஆனால் நாம் மேலும் ஏற்றிவிடுகிறோம். இறந்த பிறகு நம்மை எரிக்கும் போது நாம் செய்த தீவினைகள் யாவும் தீயினால் சுத்தம் செய்யப்பட்டு தூய ஆத்மாவாக இறைவனிடம் சேர்கிறது. அதனால் எறிந்த சாம்பல் இறைவனின் நெற்றியில் திருநீறாகிறது.
No comments:
Post a Comment